விமானத்தின் உள்ளிருந்த சொகுசுத்தனம் கூட போலியாகப்பட்டது.
- கடும் பச்சைநிற அன்கர் பீர் டின்னொன்றை உடைத்து வாயில்க் கவிழ்த்தேன்.பொன்னிறத் திரவம் தொண்டைக்குள் இறங்க மறுத்தது.
சிகரட்டொன்றைத் தீக்கொளுத்தியபோது, றோஸ் நிறப் பவுடரில் அழகாயிருந்த அந்த விமானப் பணிப்பெண் வேகமாக வந்தாள். " ஸ்மோக்கிங் ஈஸ் ப்ரொஹிபிட்டட் ஹியர் "
டாய்லெட்டுக்குப் போயாவது ஒரு தம் இழுக்கலாம் என்கிற உற்சாகமும் வராமல்,
கோபம் காட்டாமல் சிகரட்டை ஆஸ்ட்ரேயில் அழுத்தினேன். அணைத்தேன்.
" ப்ளீஸ்... பாஸ்டர்ன் யுவர் சீட் பெல்ட் " என்றவள் ,அவளாகவே என் இருக்கைப் பட்டியை மாட்டிவிட...மவுனமாகயிருந்தேன்.
அவளது இடுப்பு வளைவுகளை ரசிக்கக் கூடிய மனோநிலையில் நானில்லை. அந்த அழகின் கிறக்கம் உடம்பில் இயல்பாக கிளர்ந்து எழச்செய்யும் உஷ்ணம்கூட இந்த இருபத்தியாறு வயதுக்குள் இப்போது என்னை இம்சைப்படுத்தவில்லை.
பீர் ரொம்பவும் கசந்தது. - என் மனசைப்போல...
- காரணம்...காதல்.
காதல் கசக்குமா?
இந்த நிமிடம் எனக்குக் கசந்தது.
காதல் கசப்பதற்குக் காரணமானவள்...என் தேவ தேவி.
அதுவும்,கடல் கடந்த காதல்.
இலங்கைப் பிரஜையான எனக்கு இந்திய தேசத்துப் பெண்மீது காதல்.அவளுக்கும்தான்.
ஆனால் இந்த நிமிடம்...
அந்தக் காதல் ஒரு கேள்விக் குறியாகிப்போய்...
என் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.
------------ ------------ ----------- ----------- ----------- --------
ஒரு வருடத்துக்கு முன்னையதோர் நாள்.
மெட்றாஸ் எனும் சிங்காரச் சென்னைத் தமிழ்நாட்டில் - பூக்கடை எனும் வியாபாரத் தெருவிலிருந்த ஒரு பழக்கடையில் கொஞ்சம் ஆப்பிள்களை வாங்கிக்கொண்டு யதார்த்தமாக தமிழில் விலை கேட்டேன்."எவ்ளோப்பா...?"
கடைக்காரர் மலங்க மலங்க விழித்தார்.
மீண்டும் கேட்டேன்."ஏன்பா...தமிழ் தெரியாதா?"
- பதிலில்லை.
எனக்கு எரிச்சலாய் வந்தது. ஹிந்தியில் கேட்டேன் "ஹிந்தி மாலும்...ஆப்பிள் கித்னா ருபியா...?"
அவன் அதே மவுனமாய்...
நான் உடம்பில் ரொம்பவும் சூடேறினேன்.
- எனக்குத் தெரிந்த [சுமாராக] அத்தனை மொழிகளிலும் கேட்டேன்.
" டூ யூ நோ இங்க்லிஷ்...?"
" மலையாளம் சம்சாரிக்கும்...?"
" தெலுங்கு தெல்சா...?"
- எதற்கும் பதிலில்லை.அப்போதுதான்...
பின்னாலிருந்து சில்லறை சிதறிய அந்த சிரிப்பொலி கேட்டது. திரும்பினேன்.
இளம் மஞ்சள் நிற சல்வாரில் அவள் நின்று கொண்டிருந்தாள்.
- அந்த இந்திய தேசத்து தேவதை.
மனிஷா கொய்ராலாவின் முகச்சாயல்,ரவீனா டாண்டனின் உயரமும் நிறமுமாக...மூவாறு வயதுத் தோற்றத்தில் குழந்தைத் தனமாய்...அதே குழந்தைத்தனமான புன்னகையோடு...
" க்யா?" - என்ன? என்றேன் ஹிந்தியில்.
அவளும் அதே ஹிந்தியில் சொன்னாள் [அதன் தமிழ் வடிவம்]
" நீங்கள் என்னதான்... எத்தனை முறைதான் கேட்டாலும் அவனால் பதில் சொல்ல முடியாது மிஸ்டர்...மிஸ்டர்..."
" மிப்ரா..."
" மிப்ரா...ஏன்னா அவனொரு செவிட்டு ஊமை. கடை முதலாளி எங்கேயோ வெளியில போயிருக்கார்போல...அவன் எடுபிடியாளு. நான்தான் இங்கே தினமும் வந்திட்டுப் போறேனே.அதான்...முதலாளி வரும் வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..."
நான் தாமதித்தேன்.
முதலாளி வந்ததும் விலை கேட்டுப் பணம் கொடுத்தேன்.
எனக்காகக் காத்துக்கொண்டிருந்த அவளுடன் - அந்த தேவதையுடன் பேசிக்கொண்டே பாரிஸ் கார்னர் வரை நடந்தேன். "உங்க பெயர்?" - கேட்டேன்.
வலக் கன்னத்தில் இலேசாகக் குழிவிழச் சிரித்தாள்."யாஸ்மின்..."
பெயர் பெர்பியூமாய் மணத்தது. அவளும் மணத்தாள்.
"உங்களுக்குக் கேரளாவா?"
மென்மையாகச் சிரித்தேன்.
பலரும் கேட்பதைத்தான் அவளும் கேட்டிருக்கிறாள்.ஏனெனில்,கேரளத்து முகச்சாயல் எனக்கு.
" இல்லை...சிலோன் - சிறீலங்கா."
- நம்ப முடியாமல் பார்த்தாள். பிறகு நம்புவதாகச் சொன்னாள்.
பாரிஸ் கார்னர் வரைக்கும் இலங்கை இனப்பிரச்சினை பற்றியே அலசிக்கொண்டு நடந்து, அவளுக்கான பஸ் வந்ததும் ஏறிப்போனாள்.நானும் கொஞ்சம் சோர்ந்துதான் போனேன்.
தென்றலாய் வந்து மணம் பரப்பி.தென்றலாகவே போய்விட்டவள் அன்றைய என் தூக்கத்தையும் கெடுத்துச் சிதைக்கத்தான் செய்தாள்.
அப்புறம்...
யதேச்சையாக சில சந்திப்புக்கள்...நான் அவளையும் அவள் என்னையும் கேட்டுப் பல சந்திப்புக்கள்...
இப்படியாக -
வர்த்தக நோக்கில் வாரத்திற்கொரு முறை நான் இந்தியா போகும்போதெல்லாம் யாஸ்மினைச் சந்தித்து...நான் இலங்கையில் இருக்கும்போதெல்லாம் அவள் எனக்குத் தொலைபேசி.... நமக்குள்ளிருந்த ஆத்மார்த்த அன்பும் நேசமும் படிப்படியாக வலுப்பெற ஆரம்பித்து.....காலவோட்டத்தில் ஒருநாள்,
நாமிருவரும் ஒருசேர நடந்து, சடுதியாகப் பெய்த மழைக்காக மவுண்ட் ரோட்டில் ஒரு ரெஸ்டாரெண்டில் ஒதுங்கி...பாதாம்கீருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்த அந்த இனிப்பான சந்தர்ப்பம் வாழ்க்கையின் கடைசி மரணத்தறுவாய் செக்கன் வரைக்கும் மறக்க முடியாதது. தன் றோஸ் நிற உதடுகளை விரித்து அவளாகவே சொன்னாள்.
" நாம ரெண்டு பேரும் காத்லிச்சாலும் தப்பில்லன்னு தோணுது மிப்ரா..."
"வாட்..." - என்க்குள் படர்ந்த மயிலிறகு சுகம் தாண்டியெழுந்த அதிர்ச்சி களைவதற்குள்...
" யெஸ் ஐ லவ் யூ மிப்ரா..மே தும்சே பியார் கர்த்தாஹு " - மீண்டும் எனது ஆறடியுயர உடம்பு பூராவும் சிலிர்த்தது.
நான் மவுனமாயிருந்து பின் சொன்னேன் " ஐ லவ் யூ டூடா "
- யாஸ்மின் என் நெஞ்சில் மிருதுவாக சாய்ந்து கொண்டாள்.
---------- ---------- --------- --------- ----------- --------- ----------- ------------
இப்படித் துவங்கிய நம் காதல் கடந்த ஒரு வருட காலமாக எதுவிதப் பிரச்சினைகளுமின்றி ரொம்பவும் இயல்பாகத்தான் போய்க்கொண்டிருந்தது.ஆனால் விதி...
இப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால் நேற்றைய சூனிய தினத்தில் மட்டும் நான் என் தேவதையைச் சந்திக்காமலேயே இருந்திருப்பேனோ என்னமோ...
நேற்று -
மெரீனா பீச்சில் கைகோர்த்து உலாவிக் கொண்டிருந்தோம்.
பக்கத்தே கம்பியூட்டர் ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவனை சிலர் சூழ்ந்திருந்தார்கள்.
" சும்மா ஒரு ஜோதிடம் பார்ப்போமா...?" என் தேவதை ஆவலாய்க் கேட்க.எனக்கு இந்த ஜோதிடம்,சாஸ்திரங்களிலெல்லாம் ந்ம்பிக்கையில்லாத போதும் மறுக்கமுடியவில்லை. மறுத்திருக்கலாம்.
அந்த அவன் - ஜோதிடத் துரோகி என்னையும் என் உள்ளங்கை ரேகைகளையும் மாறி மாறிப் பார்த்து ஏதேதோ சொல்லிக்கொண்டே போக, என்னை விடவும் ஆவலாகக் கேட்டவள் என் தேவதைதான்.
"நீங்க பிறந்த நேரம் நல்ல நேரம்.ஆனால் இப்போ உச்சியில சனியிருக்கு.நவ மாசம் வரும்வரைக்கும் நம்பிக்கைகள் ஈடேறாது. உங்க ராசி தனு.மூலம்,பூராடம்,உத்தராடத்து முதற்கால் மனமகிழ்ச்சி,ஆயுள்ரேகை பலமாயிருக்கு.ஆனால்..."
அந்த ஆனாலில் வந்தது வினை.
" என்ன?" - என்றேன் சுருதியேயில்லாமல்.
" சொல்லட்டுங்களா...?"
" சொல்லுப்பா "
" உங்க மணவாழ்க்கை ந்ல்லாயிருக்காது...இரட்டை விவாகம்னு ரேகை சொல்லுது..."
நான் அதிர்ந்தேனோ இல்லையோ , என் தேவதை உடம்பு முழுவதும் அதிர்ச்சிகளை உள்வாங்கியதை என்னால் உணர முடிந்தது.சட்டென்று களையிழந்து அவள் முகம் கறுத்துப்போக...
நான் பிடிவாதமாக அவளை அந்தயிடத்திலிருந்து நகர்த்தினேன்.
ஆனாலும், ஏதோவொன்றை இழந்துவிட்ட சோகம் மட்டும் அவளில் தெரிந்தது. ஜோதிடக்காரன் மேல் வந்த கோபத்தை விழுங்க முடியாமல்...
மெரீனாவின் ஓரமாய்ப் போய் உட்கார்ந்தவள்,உடம்பு குலுங்கி அழ ஆரம்பித்தாள்.ஆறுதல் படுத்தத் தெரியாமல் தடுமாறினேன்.
' தனக்கு மட்டுமேயானவனுக்கு இரண்டு தாரங்களென்றால் எந்த சராசரிப் பெண்தான் - எந்தக் காதலிதான் தாங்கிக் கொள்வாள்?'
"வெறும் வாய்ப் பிழைப்பும் வயிற்றுப் பிழைப்புமாக ஜோதிடமெல்லாம் சுத்தப் பொய்டா..."
" இல்ல... என் மனசுக்கு ஏதோ பயமாப்படுது...உங்களை இன்னொருத்திகூட பங்கு போட்டுக்கிற அளவுக்கு வெறும் சினிமாத்தனமான தைரியம் எனக்கில்ல மிப்ரா..."
" ஏண்டா சும்மா பயப்படுறே...ஃபர்கெட் இட் யாஸ்மி...உனக்கு நம்பிக்கையில்லேன்னா நாம இன்னுமோர் இடத்திலேயும் இதேமாதிரி பார்ப்போமே...அவன் என்ன சொல்றான்னும் கேட்போம்.ப்ளீஸ் அழாதேடா."
" சரி வேறோர் ஆள்கிட்டேயும் பார்ப்போமே..."என்ற என் தேவதை கொஞ்சம் இயல்புக்கு மாறினாள்.
காதல்... பைத்தியக்காரத்தனமாய் என்ன பாடாய்ப்படுத்துகிறது?சிறுபிள்ளைத்தனமாய் சிந்திக்கத் திராணியற்று... சிறுதுளிச் சந்தோசமோ,துக்கமோ மனிதனை எத்தனை தூரம் கொண்டு போகிறது...
ஆட்டோவில் ஏறிப் பறந்தோம்.
சாந்தி தியேட்டர் பக்கமாக - தனது சில்லறைச் சாமான்களோடு அறுபது வயதைத் தாண்டிய ஒரு பெரியவர் - ஜோதிடர் தெருவோரம் கிடைத்த சைக்கிள் கேப்பில் கடை பரப்பியிருக்க,நெஞ்சுக்குள் பயப்பந்து சுழன்றடிப்பதையும் மீறி அவர் பார்வைக்கு கையை விரித்தேன்.
யாஸ்மின் மிகுந்த ஆவலோடு பார்க்க,அவர் சொல்லத் தொடங்கினார்.
" தனு ராசிக்காரரான உங்களுக்கு இப்போ உச்சியில சனியிருக்கு.மூலம்,பூராடம்,உத்தராடத்து முதற்கால் மனமகிழ்ச்சி...ஆனாலும் உங்களுக்கு ரெண்டு சம்சாரங்கள்னு ரேகை சொல்லுது..."
என் தலையில் இடியிற்ங்கியது.நெஞ்சுக்குள் பக்கென்று ப்லூன் வெடித்தது.
- யாஸ்மின் கண்களில் பொலபொலவெனக் கண்னீர்...
அவள் என்னைக் கொஞ்சம் சந்தேகமாகப் பார்த்த பார்வையில் எனக்குள் முள் தைத்தது.
எனது ஆறுதல் வார்த்தைகள் அவளில் எடுபட்டதாகவும் இல்லை.
இருள் போர்வை போர்த்த, " வீட்டுல தேடுவாங்க...நேரமாயிடுச்சு..."என்று யாஸ்மின் புறப்பட்டுப் போனாள்.
இந்தியாவை விட்டு இலங்கைக்குத் திரும்பும்போதெல்லாம் என்னை ஏர்போர்ட் வரை வழியனுப்ப வரும் என் இந்திய தேசத்து தேவதை இன்றைக்கு ...நான் காத்திருந்து பார்த்தும் வரவேயில்லை.
--------- --------- -------- -------- -------- --------- --------- ---------
இந்தியன் ஏர்லைன்ஸ் கொழும்பு ஏர்போர்ட் ரன்வேயில் வட்டமடிக்கும் போதுதான் சுதாகரித்து சுயநினைவுக்கு வருகின்றேன்.என்றாலும் மனசு பூராவும் என் இந்திய தேசத்து தேவதையே வியாபித்திருக்கிறாள்.
நான், அடுத்த தடவை - அனேகமாக அடுத்த வாரம் மீண்டும் இந்தியா செல்லும் போதாவது அவள் தெளிந்திருப்பாளா? இல்லை...எமக்கிடையிலேயான இடைவெளி அதிகரித்திருக்குமா?
எதுவுமே புரியாமல் மிகவும் குழம்பிப் போய்த்தான் இருக்கிறேன்.
[ யாவும் கற்பனை ]
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
13.05.1996

No comments:
Post a Comment