Saturday, October 17, 2009

இயற்கைக்கு நேரமில்லை



" ராத்தா...வா ராத்தா பட்மிண்டன் விளையாடுவோம்."
இன்னும் ஏழு வயது நிரம்பாத சப்ராஸ் தனது றோஸ்நிற உதடுகளை அழகாய் விரித்து, ஆப்பிள் நிறத் தேகத்தை சிலிர்த்து, செம்பட்டைத் தலைமயிரைக் கோதிக்கொண்டே கேட்டான்.
" வா ராத்தா விளையாடுவோம்."
"ம்ஹும்...எனக்கேலாது..."
- அவித்த வெரலிக்காயை மிளகாயும் உப்பும் போட்டுப் புரட்டி ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமிலா அலட்சியமாகச் சொல்ல,
" வா ராத்தா"
"ஏலான்னு சொல்றேனுல்ல'"
" அப்போ...கிரிக்கெட் விளையாடுவோமா?"
- சாமிலா மவுனமாக வெரலிக்காயை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
சப்ராஸ் வந்து அருகில் ஒட்டிக்கொண்டான்.
" அப்போ... வயலுக்குப் போய் பட்டம் விடுவோம் வர்றியா ராத்தா?"
" எனக்கேலா... நீ வேணுமின்னாப் போ"
சாமிலா கடிந்துகொள்ள, சப்ராஸ் அழத்துவங்கினான்.
" நான் உன்னோட அச்சுப் புச்சி ஆறு மாசம் கோவம்...நீ போ...நான் உம்மாகிட்ட சொல்றேன்."_அழுதுகொண்டே சப்ராஸ் நகர்ந்துபோக,


பதினான்காம் வயதின் ஆரம்பத்திலிருந்த சாமிலா, மிளகாய்ப் பொடி வைத்த பேப்பர் துண்டையும் தன் நாவால் ஈரப்படுத்தி ருசித்துச் சப்புக் கொட்டினாள்.


சாமிலாவுக்கு சந்தனம் மங்கிய மாதிரியொரு நல்ல நிறம். செழுமை பரவ ஆரம்பித்த தேகம். அடர்த்தியான கூந்தல். ஆனால், தாவணியோ சல்வாரோ அணியும் அள்வுக்கு அவல் தேகமோ, வயதோ, பெண்மையோ இன்னும் பக்குவப்படவில்லை. பருவக்கொடி அவள்மீது ப்டராமல் ஓரமாக ஒதுங்கிப்போக, எதையும் அறியாத வெகுளியாய்... இன்னும் சின்ன்ப் பிள்ளையாட்டம்.
..

உம்மா உள்ளுக்குள் கவலைப்பட்டு அழத் துவங்கியதோ இல்லைஅவளது அடிவயிற்று நெருப்பின் சூடோ அறியும் திராணியும் சாமிலாவுக்கு இல்லை. உம்மாவுக்கு ஈடாக வாப்பாவும் தன் வேதனையை மனதுக்குள் ரகசியமாகப் பத்திரபடுத்தியிருந்தார்.

 பூப்பூக்கும் நந்தவனம் இன்னும் பூப்பெய்தாமலேயே இருந்ததில் அவர்களது வருத்தத்தில் நிரம்பவும் நியாயம் இருந்தது. என்ன செய்ய... விதி வரைந்த பாதைதானே வாழ்க்கை ஓடுது.



ன்றொரு நாள்;
உம்மா, வாப்பாவிடம் ரகசியமாகச் சொன்னதையும் சாமிலா ரகசியமாகக் கேட்கத்தான் செய்தாள். ஆனாலும் எதுவும் புரிந்தும் புரியாத நிலையில் சாமிலா எதற்கும் கவலைப்பட்டதாகவும் இல்லை.


" ஏங்க... என்க்குப் பதிமூன்று வயசு நடக்கும்போதே நான் பெரிய மனுசியாயி இருபது வயசுல குழந்தையும் பெத்தாச்சு. ஆனால் சாமிலா இன்னும் பட்டுப்போன மரம் மாதிரி...பயமாயிருக்குதுங்க...யாராவது நல்ல டாக்டர்கிட்டப் போலாமா...?"


"வேணாம் ராபிதா இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்.இயற்கை வளர்ச்சிங்கிறது இறைவனோட கையில உள்ள விஷயம். டாக்டரால என்ன செய்ய முடியும்?சொல்லு செடிக்கு தண்ணீர் வேணும்னா ஊத்தலாம்..பூக்க வைக்க முடியாது."
ராபிதா மவுன்மாகிப் போனாள்.


சாமிலா மிளகாய்த் துகள் ஈரக்கசிவு படிந்த வெற்றுப் பேப்பரைத் தூரமாக எறிந்து, பக்க்த்து வாழை மரத்தின் இலையொன்றை எம்பிப் பிடித்து...இழுத்து கைகளைத் துடைத்துக்கொண்டாள்.
உம்மா அழைப்பது கேட்டது..." சாமிலா... ஏய் சாமிலா..."" "என்னம்மா?"_முற்றத்தில் இருந்தே குரல் கொடுத்தாள்.
" இஙக பாருடீ...த்தா...குசினியில வேலையாயிருக்கேன் நான்...தம்பியைக் கூட்டிட்டுப் போய் கொஞ்சம் விளையாட்டுக் காட்டேன். வாயேன்மா..."
" தம்பியை இங்கே வரச்சொல்லுங்க:"
சப்ராஸ் கண்களைத் துடைத்துக்கொண்டு ஓடி வந்தான்.
"உம்மாகிட்ட போய் பத்தி வெச்சியா?"
" இ...ல்ல"
" என்ன வெவ்வே..."

சாமிலா சப்ராஸின் முதுகில் இலேசாக இரண்டு தட்டுத் தட்ட, அவன் இவளைத் தன் சின்னக் காலால் உதைக்க, இவள் பதிலுக்கு அவனது காதைத் திருக... அவர்களுக்கிடையே ஒரு சின்னச் சண்டை மூண்டது.
சப்ராஸ் சாமிலாவின் முதுகில் தன் இரு கைகளையும் வைத்து பலமாகத் தள்ளிவிட...

சாமிலா "உம்மா..."என்று வீறிட்டவளாய் கால் இடறி பக்கத்துப் பூஞ்செடியோரமாகப் போய் விழுந்தாள்.விழுந்த வேகத்தில் ஏதோவொரு உணர்வில்...அவளது இடுப்புப் பகுதியில் கவுனுக்கு மேலாக ஏதோ தண்ணீர் மாதிரி... ரத்தம்...
சப்ராஸ் பயத்தில் உறைந்து போனான்.
சாமிலாவின் குரலுக்குப் பயந்தவளாக உம்மா பதறியவளாக ஓடி வந்தாள்.

" என்னடா பண்ணினே அவளை..."உம்மா பூஞ்செடிக்குள் பூக்குவியலாக விழுந்திருந்த சாமிலாவின் கரம் பிடித்துத் தூக்க...விழிகள் அகல விரிந்தன.

நெஞ்சு படபடக்க...எதையுமே உணர முடியாமல் சாமிலாவுக்குள் ஒரு பயம் பற்றிக்கொண்டது.

_உம்மாவின் சந்தோசக் கண்களில் ஒளி வெள்ளம் படர்ந்து...கண்ணீர் கோடிட்டுப் போக...உடனே சாமிலாவை வாரியணைத்துக்கொண்டு உள்ளே ஒடினாள்.


சூழ்நிலை யதார்த்தம் புரியாத சப்ராஸ் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். நெடுநேரமாக...


"ஏன் ராத்தாவுடைய உடுப்பெல்லாம் ரத்தம்? உம்மா அழுதுட்டே போறா...ராத்தாவுக்கு என்னமாகிலும் ஆகிப்போய்... வாப்பா வந்து என்னை அடிப்பாரோ...ராத்தாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாது.ஒன்னும் ஆகக்கூடாது...'
சப்ராஸ் வெடவெடத்து நடுங்கி,கண்கள் குளமாகிப் போயின.

எட்டிப் பார்த்த எதிர் வீட்டு மாமியிடம் "மதினி சாமிலா மவள் வயசுக்கு வந்துட்டா..."என்று உம்மா சொன்னது அந்தச் சிறுவனுக்குப் புரியவேயில்லை.

அச்சம் அவனை முழுமையாக ஆட்கொண்டது.
" வாப்பா வந்து என்னை அடிப்பாரோ..."
உடம்பில் நடுங்க ஆரம்பித்தான் சப்ராஸ்.

- நிறைவு -

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை

17-03-1995

No comments: