இந்தப் பரந்த உலகில் இக்கணம் நான் மட்டுமே மட்டும் மிக மிக மிகச் சந்தோசமாக இருப்பதாக உணர்கின்றேன்.
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து இன்று காலையில்தான் எனக்கும் அருந்ததிக்கும் திருமணம் நடந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லைதான். என்றாலும் ஆயிற்று.
இந்தக் கணம்,
இதமான குளிரில்...
அலங்கரிக்கப்பட்ட முதலிரவு அறையில்...
நான் என் புது மனைவி அருந்ததிக்காகக் காத்திருக்கின்றேன்.
பால் தம்ளர் ஏந்தியவளாக, தலையில் பூ மகுடம் சூடி சினிமாக் க்தாநாயகியாய் அன்ன நடை நடந்து என்னவள் வருவாள் என்கிற கலர் கலரான கனவுகளோடு....காத்திருக்கின்றேன்.
என்னவள் வந்துவிட்ட பிறகு ' என்னைப்பற்றி ' உங்களிடம் சொல்வதற்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது...ஆக, இப்போதே சொல்லிவிடுவது உசிதம்.
நான் ஒரு அனாதை.
என் பிறப்பு ஒரு குப்பைத் தொட்டிச் சமாச்சாரம்.
' அப்பா யாரு அம்மா யாரு நானும் பார்க்கல...
கண்ணீரைத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல..'
- என்கிற புதிய பாதை பார்த்தீபன் மாதிரியான வாழ்க்கைப் பின்னணி எனக்கு.
இன்றைய திகதிக்கு, இருபத்தியெட்டு வயதில் உயரமாய், திடகாத்திரமாய், முகத்தில் தாடைக்குக் கொஞ்சம் மேலாக சின்னதாயொரு வெட்டுக்காயத் தழும்போடு, மாநிறமாய்...கொ..ஞ்..ச..ம் அழகனாய் இருக்கும் என் பெயர் நவநீதகிருஷ்ணன். பிரியமானவர்கள் ' நவா ' என்று அழைப்பார்கள்.
எப்போதுமே சாதி,மதம்,குலம்,கோத்திரம் பார்க்காத நான் இந்திரஜித்,அமீர்டீன்,கிறிஸ்டோபர்,சிறிசேன என்கிற தற்காலிகப் பெயர்களிலெல்லாம் என் தொழில் நிமித்தம் இயங்கி வந்ததுண்டு.
அப்படி நான் என்னதான் தொழில் செய்கின்றேன் என்று ஆச்சரியமாகக் கேட்காதீர்கள். கேட்டால் கொலை விழும் ஜாக்கிறதை. ஜோக்கில்லம்மா...பீ சீரியஸ்.
யெஸ்...நானொரு கான்ட்ராக்ட் கில்லர். - தமிழ்ப்படுத்தினால் ' வாடகைக் கொலையாளி ' என்று அர்த்தம். ஒரு சின்னத் திருத்தம்...நேற்றைவரைக்கும்.
பணத்துக்காக நிறையவும் கொலைகள் செய்திருக்கின்றேன். த்தூ என்று காறி உமிழ்ந்தாலும் உண்மை அதுதான்.
பணத்தின் மீது இருந்த வெறி என்னை வெகு லாவகமாகக் கொலைகள் செய்யும் அளவுக்கு உசுப்பேற்றி வளர்த்து விட்டிருக்கிறது.
எந்தளவுக்கு என்றால்...
ஒரு லட்சம் ரூபாவுக்காக தாசில்தாரைப் போட்டுத் தள்ளச் சொன்ன மில் ஓனரை, தாசில்தாரின் இரண்டு லட்சம் ரூபாவுக்காக வெட்டிச் சாய்த்த அளவுக்கு நீதி நியாயம் பார்க்காத டபிள் க்ராஸிங் பணவெறியன். அதிலும் ஒரு சின்னத் திருத்தம்... நேற்றைவரைக்கும்.
தவிர,நிறையவும் சிகரட் புகைப்பேன்...நிறையவும் பீர் அருந்துவேன்...சில வேளைகளில்...பிடிக்காத கறுப்பிருட்டுக்குள் பிடித்த செந்நிறப் பெண்களோடு நிறையவும் தப்புத் தண்டா பண்ணுவேன். - எல்லாம் நேற்றைவரைக்கும்தான்.
இப்படி நேற்றைவரைக்கும்...
புயல்களுக்குள்ளேயே அடிபட்டுச் சுழன்று, இரசாயனக் கலவைக்குள் அமிழ்ந்து மூச்சுத் திணறிக் கொண்டிருந்த என் வாழ்க்கையில் தென்றலாய்...அமிர்தமாய் வந்தவள் அருந்ததி. கேடுகெட்ட என் வாழ்க்கையைச் சுட்டுப் பொசுக்கிய தீ..அருந்ததீ.
--------- -------- -------- -------- --------- -------- ---------
` எங்கேயோ... எப்போதோ சடுதியாக நிகழ்ந்த முதல் சந்திப்பிலேயே காதலாய் என்னைக் கசிந்துருகச் செய்தவள் அருந்ததி.அவளும் என்னைக் காதலிப்பதாகச் சொன்ன இனிப்பான வார்த்தையில் நான் எப்போதுமில்லாதவாறு ஒரு குளிர்ச்சியை உணர்ந்திருக்கின்றேன்.பண வெறியும் கொலைத்தாகமும் என்றிருந்த என் மனக் குரூரத்தை நேரெதிர்த் திசைக்கு இட்டுச் சென்று வாழ்க்கையின் யதார்த்தங்களையும் சுகங்களையும் கற்றுத் தந்தவள்.
கடற்கரையோரமாக ஒருநாள்,
காதலை நாமிருவரும் ஒருசேரக் காதலித்துக் கொண்டிருந்ததொரு சுகமான தறுணம்...அருந்ததி கேட்டாள்.
" நவா... இவ்ளோ காலமும் கொலை கிலைனு நிறையவும் தப்புப் பண்ணி ...அளவுக்கு அதிகமாகவே பணம் சேர்த்துட்டே...இப்போதாவது பழசையெல்லாம் விட்டுட்டு ஒரு புது மனுசனா...நியாயமா ஏதாவது தொழில் செஞ்சு வாழலாமே..."
நான் நிமிர்ந்து பார்க்க,அவளாகவே தொடர்ந்தாள்.
" எப்போதாவது நீ ஜெயிலுக்குப் போறதொரு நிலைமை உருவாயிடுச்சுன்னா...இல்ல உன்னை யாராவது விரோதிங்க போட்டுத் தள்ளினா என்னோட கதி...நிர்க்கதிதானே...யோசிச்சுப்பாரு...நீ எனக்கு வேணும் நவா...காலம் காலத்திற்கும் வேணும்..."என்றவள் என் நெஞ்சில் முகம் புதைத்து அழத்துவங்க,
அவளது வார்த்தைகளில் இழையோடிய ஏக்கம் என்னை நிரம்பவும் யோசிக்க வைத்தது. யோசித்தேன்.
நிழலான - தப்பான தொழிலை விட்டுவிட்டுப் புது மனிதனாக வாழ வேண்டிய தேவையை உணர்ந்து...முதன் முதலாக அன்றுதான் மனமுருகிக் கடவுளிடம் ப்ரார்த்தித்துக் கொண்டேன்.
அதன் பிறகுதான், நாமிருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வதாகவும் ஒருசேர முடிவெடுத்தோம்.
பாலையாய்ப்போன என் வாழ்க்கையை ஒரு பெண் பசுஞ்சோலையாய் மாற்றுவாள் என நான் எதிர்பார்த்திருந்தேனா என்ன ? கேள்விக்குறியாக மட்டுமே நீண்டிருந்த என் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கற்றுத் தந்தவள் அருந்ததிதான். சிறப்பான ஒரு எதிர்காலத்தைக் காட்டி அதற்கு அத்திவாரமும் போட்டவள். நான் அனாதையில்லை என்கிற உணர்வை எனக்குள் ஊடுருவச் செய்து...என்னை சந்தோசத்தில் அழச் செய்தவள்.காதலியாக,மனைவியாக,ஒரு தாயாக...ஏன் ...எனக்கு தெய்வமாக ஆகிப்போனவள் என் அருந்ததி.
அப்படிப்பட்ட அருந்ததியை இன்றைய சுபமுகூர்த்தக் காலை வேளையில் நான் மிக்க சந்தோசமாகத்தான் திருமணம் செய்து கொண்டேன்.
இப்போது - இந்த நிமிடம், முதலிரவு அறையில் முத்துக் குளிப்பதற்காய் என் அருந்ததிக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு விபரீதம் எனக்காகக் காத்திருப்பதை அறியாமல்...
---------- ----------- ----------- ----------- -----------
அருந்ததி,கதவைத் தாழிட்டுவிட்டுப் பால் தம்ளரோடு பவ்யமாய் - அடக்கமாய் - நாணமாய் - வெட்கமாய் என் அருகில் வந்து அமர்ந்துகொள்ள, அவளை ஆரத்தழுவ வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
" த்தாங்க... பால் சாப்பிடுங்க..."
பால் தம்ளரை நீட்டிய அவளது கரங்களில் சின்னதாயொரு சில்மிசம் செய்து...வாங்கிக்கொண்டேன்.
" நீ பால் சாப்பிடல்லையா..." -கேட்டேன்.
" எனக்குப் பசும்பால் ஜீரணிக்காதுங்க..."
' எனக்கு பாலில்ல...கல்லோ - கள்ளோ எது சாப்பிட்டாலும் ஜீரணிக்கும் '
அவள் என்னைத் தாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்க,பால் முழுவதையும் ஒரே மூச்சில் அருந்தினேன்.
அடுத்த சில கணங்கள்...
ஏதோ மயக்கம்...நெஞ்சு அடைக்கிற மாதிரி...
நான் சற்றும் எதிர்பாராத நிலையில், கண்களில் தீப்பொறி பறக்க...அருந்த தீயாக விகாரமாகச் சிரிக்க ஆரம்பித்தாள் அருந்ததி.
நான் நா உலர்ந்து போகத் தடுமாறினேன் " அ..ருந்...த...தி...."
- உலகமே தலை கீழாகச் சுழல்கின்ற பிரமையிலும், சட்டென்று அவள் விழிகளிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் திரள்வதை அவதானித்தேன். விரல்நொடிக்கும் பொழுதில் பத்ரகாளி மாதிரியாகி கதறத் தொடங்கினாள் அருந்ததி...
" கொலைகாரப் பாவி...உனக்குக் கல்யாணம் ஒரு கேடா...அடுத்தவங்களோட புதைகுழி மேல உனக்கோர் சந்தோசமான வாழ்க்கையும் முதலிரவும் கேட்குதா ராஸ்கல்...நீ இப்போ சாப்பிட்டது பாலில்லடா...விஷம். பயங்கரமான விஷம்...அதுவும் உன் பணத்திலேயே வாங்கினது. ..."
- நான் திக்கென்று அதிர்ந்து....
"உன் உயிர் என் கையால - என் முன்னாடியே அடங்கிறதைப் பார்க்கத்தாண்டா இத்தனை காலமும் காத்திருந்தேன். எல்லாம் ஆயிற்று... இன்னும் சில விநாடிகளில நீ செத்துப்போயிடுவே... துடிதுடிச்சு...அடுத்தவங்களோட மரண அவஸ்தை, வலி உனக்கும் புரியணும்..."
என்னில் மரண பயம் உருவெடுக்க...
" நான் உன்னைக் காதலிச்சது,கல்யாணம் பண்ணிக்கிட்டது எல்லாம் வெறும் வேஷம் நவா...உன்னைப் பழி வாங்கிறதற்கான நீண்டகால நடிப்பு. என்ன அப்படிப் பார்க்கிறே...புரியல இல்ல..."
என் கடைவாயோரம் நுரை தள்ளியது.
"யாரோ தூக்கியெறிஞ்ச பணத்துக்காக என் காதலனைக் கொன்னவன்டா நீ...ஞாபகமிருக்கா...கஷ்டம்ஸ் ஆபிசர் பிரதாப்...ஆறு மாசத்திற்கு முன்னாடி அநியாயமா ... துடிதுடிக்க வெட்டிப் போட்டியே...அவர் என்ன பாவம்டா செய்தாரு ? ஏண்டா அவரைக் கொன்னே...ஏண்டா..."
அருந்ததி உடம்பு குலுங்கி அழத் துவங்கி,
சடரென்று என் கழுத்தை நெரித்து... என்னைப் போட்டுப் புரட்டி...வெறிபிடித்தவளாய்...பைத்தியம்மாதிரி..." ஏண்டா என் பிரதாப்பைக் கொன்னே...ஏண்டா ...ஏண்..டா.."
நான் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொ...ண்...டி...ரு...ந்...தே....ன்.
[யாவும் கற்பனை]
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
16,03.1995





