மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
மழை ஓய்ந்து.... பனி போர்த்தியிருந்ததோர் மாலைப்பொழுது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக, புல்வெளியும் மலர்ச்செடிகளும் சூழ அமையப்பெற்றிருந்த வீட்டில்...
கிறுக்கப்பட்ட கவிதையாகக் கலைந்து கிடந்தது; அந்த ஓவியனின் தனியறை.
அணைக்க மறுந்த, சிம்னியை ஒத்ததோர் சிறு விளக்கின் ஒளித்துகள்கள் அறையெங்கும் சிதறிக் கிடந்தன.
துடைத்துத் தூசகற்றி...மேலுமோர் புதிய ஓவியத்தைப் பிரசவிப்பதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த அகன்ற மேசையின் கண்ணாடி 'முற்றம்' மட்டும் பளிச்சென்றிருந்தது.
நடுமத்திக் கண்ணாடி முற்றத்தில்...விரித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாள், முதலிரவு அறையில் கசங்காத, கறைபடாத புதிய விரிப்பைப்போல அப்படியேயிருக்க,
அதன் பக்கத்தே... தலைக்குக் குளித்து தளர்ந்தயர்ந்திருந்தது:
கறுகறு முடியோடு கறுப்புக் கட்டழகனாக மிளிர்ந்த தூரிகை.
கறுகறு முடியோடு கறுப்புக் கட்டழகனாக மிளிர்ந்த தூரிகை.
அதற்குச் சற்றுக் கீழே...
'கண்ணாடி முற்ற'த்தின் வலது கோடியில்,
வரிசையாக உட்கார்ந்திருந்தன மஞ்சச் செவப்பு, காந்தக் கறுப்பழகிகள் அடங்கலான...இன்னும் கன்னி கழியாத, சில 'கலர்'புல் தேவதைகள்.
மாரில் திரண்டு...கழுத்து வழி பிதுங்கக் காத்திருந்த அந்த இருபத்திநான்கு புட்டிகளும், இளமையையும் அழகையும் தம் தேகம் முழுக்கவும் இன்னும் மிச்சம் வைத்திருந்த 'அக்ரோன்' அழகிகளாகத் தெரிந்தார்கள்.
பக்கத்தே... பன்னீர் மணத்தோடு வெண்புனலால் நிரம்பியிருந்தது கண்ணாடித் தம்ளர்.
அறை முழுக்கவும் அமைதி ஆர்மோனியம் வாசித்துக்கொண்டிருந்தது.
சட்டென்று... உதிர்ந்த வானவில்லாட்டம் அந்த ஓவியக் கூடத்தின் மொசைக் தரையில், எங்கிருந்தோ வந்து வீழ்ந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.
அடுத்த சில கணப்பொழுதில்... சுதாகரித்தெழுந்து, அறை முழுக்கவும் இரு சுற்றுப்பறந்த அந்த பொன்னிறப் புஷ்பம்... வெண்புனல் ரொம்பிய கண்ணாடித் தம்ளரின் விளிம்பில் போய் அமர்ந்துகொண்டது.
நீர் அதிர்ந்தது. ஆயினும் அமைதியாக இருந்தது.
அடுத்த சில நொடி இடைவெளியில் கொஞ்சம் இளைப்பாறிக்கொண்ட அந்த வண்ணத்துப்பூச்சி...தெளிந்து ஒளிர்ந்த நீரைப் பார்த்து அன்பொழுகக் கேட்டது.
"உன்னைக் கொஞ்சம் அருந்திக் கொள்ளட்டுமா?"
நீர் மீண்டும் அதிர்ந்தது. அதற்கு வியர்த்திருக்கவும் கூடும்.
சீற்றத்தோடு பார்த்த பின் பதிலளித்தது "வேணாம்...என்னை நுகர்ந்து விடாதே..."
"தாகமாக இருக்கிறது... போதாக்குறைக்கு தளர்ந்திருக்கின்றேன்... கொஞ்சம் இடம் கொடேன்... ஒரு துளி உன்னை அருந்திக் கொள்வதற்கு..." கெஞ்சியது வண்ணத்துப்பூச்சி.
நீரோ பிடிவாதமாக மறுத்துக்கொண்டிருந்தது.
"என் தாகமும் தவிப்பும் உனக்குப் புரியவில்லையா? அப்படியென்ன இரக்கமற்ற மனசுனக்கு?" என்றது வண்ணத்துப்பூச்சி.
நீர் மீண்டும் அமைதியானது.
" உன் அனுமதி அவசியமற்றது... ஆயினும் உன்னில் பலவந்தம் பிரயோகிக்க நான் விரும்பவில்லை..." என்ற வண்ணத்துப்பூச்சி, " எனது தவிப்பை மீறிய உனது பிடிவாதம் அர்த்தமற்றது"
"அப்படியல்ல.... உனது தவிப்பை விடவும்... எனது தவம் பெரிது..." என்று சீறியது நீர்.
"அப்படியென்ன தவம்?" கேட்டது வண்ணத்துப்பூச்சி.
" பக்கத்தே சோர்ந்து அமர்ந்திருக்கும் வர்ணக் குமரிகளைப் பார்த்தாயா? அவர்களின் உணர்ச்சிகள், ஏக்கங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது." என்றது நீர்.
வண்ணத்துப்பூச்சி அமைதியாக... கேட்டுக்கொண்டேயிருந்தது.
" உனது தாகத்தை விஞ்சிய தவிப்பு அது. அவர்கள் கன்னிகழியக் காத்திருக்கிறார்கள். கன்னி கழிந்தவுடன் அவர்கள் என்னில் குளிப்பார்கள். அவர்களின் மாறுபட்ட, வேறுபட்ட வர்ணங்கள் என்னில் கரைவதனை நான் தவமாக நினைக்கிறேன். இத்தனை காலம் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது."
" சரி... அவர்கள் எப்போது உன்னில் கரைவார்கள்....?"
" அவர்கள் எப்போதும் என்னை இப்படிக் காக்க வைத்ததில்லை. இரண்டு நாட்களாகக் காத்திருக்கின்றேன். இம்முறை ஏனோ தவிக்க வைத்து விட்டார்கள்."
"ஏன்... என்னாச்சு?"
"அதனை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்..."
வண்ணத்துப்பூச்சி தம்ளர் விளிம்பிலிருந்து இறங்கிப் பறந்து, அந்த வர்ண தேவதைகள் அருகில் போய் உட்கார்ந்துகொண்டது.
சிவப்பழகிக்கு வெட்கம்.
அது தலையைத் திருப்பிக்கொண்டது.
அது தலையைத் திருப்பிக்கொண்டது.
அடுத்த அக்ரோன் அழகிகள் அமைதியாக இருக்க,
கறுப்பழகி மட்டும் "ஏன்" எனக் கேட்டது.
" நீர் வெள்ளந்தியாகக் காத்திருக்கிறது... ஏனின்னும் பிதுங்கிக் கரையாமலும் நனையாமலும் இருக்கிறீர்கள்?" கேட்டது வண்ணத்துப்பூச்சி.
" அதனை, எம்மை கசங்கிப்பிழிந்து ஆலாபனை செய்யும் தூரிகையைத்தான் கேட்க வேண்டும். மனசற்று இல்லை உடல் நலமற்று அது அங்கே படுத்திருக்கிறது பார்.....அது இப்படிச் சோர்ந்து படுத்து நாம் எப்போதும் பார்த்ததில்லை." என்றது ஊதா நிறத்துத் தேவதை.
வண்ணத்துப்பூச்சிக்கு சிலகணம் பேச்சு வரவில்லை. நாவரண்டது. அதனையும் மீறிய கவலையில் தன்னில் திராணியற்றுப் போவதை அது உணர்ந்தது.
பின் சுதாகரித்துப் பறந்து சென்று.... தூரிகையின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டது.
அன்பொழுகக் கேட்டது "உடல் அயர்ச்சியா?"
தூரிகை அதன்பாட்டுக்கு அமைதியாக இருந்தது.
"பாவம்... வர்ண தேவதைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. காதல் வயப்பட்டவர்களுக்காகக் காத்திருப்பது என்பது கொடூரமான தண்டனை..." என்ற வண்ணத்துப்பூச்சி
" ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்... தங்கள் வெறுப்புக்கும்... ஓரவஞ்சனைக்கும் என்ன காரணம்?" என கொஞ்சம் உரிமையோடு கேட்டது.
" ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்... தங்கள் வெறுப்புக்கும்... ஓரவஞ்சனைக்கும் என்ன காரணம்?" என கொஞ்சம் உரிமையோடு கேட்டது.
அந்த கருந்தூரிகைக்கு வண்ணத்துப்பூச்சியின் அன்பும் அருகாமையும் பிடித்திருந்ததோ என்னமோ...
தூரிகை சுரத்தேயில்லாமல் மென்மையாகப் பதிலளித்தது
"என்னைக் காதல் ததும்ப ஆட்டுவிக்கும்... தாலாட்டி இயக்கும் வசீகரமும், வரமும் பெற்ற விரல்களைக் காணவில்லை. ரெண்டு நாளாச்சு....மனசு வலிக்கிறது."
" ஏன்... என்னாச்சு?" அதிர்ந்து போய்க் கேட்டது வண்ணத்துப்பூச்சி.
" ஏதாே... கொரோனா பாஸிட்டிவ்வாம்... சில மனிதர்கள் வந்து எனது 'பிரம்மா'வை எங்கேயோ அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவரை அவர் இந்த ஓவியக்கூடத்திற்கு வந்து சேரவில்லை. காத்திருக்கிறேன்.
காதல் வயப்பட்டவருக்காகக் காத்திருப்பது... மிக மிகக் கொடூரமான தண்டனைதான்."
காதல் வயப்பட்டவருக்காகக் காத்திருப்பது... மிக மிகக் கொடூரமான தண்டனைதான்."
தூரிகையின் குரல் தழுதழுக்க, மென்மேலும் மேலும் மேலுமென அதிர்ந்துபோன வண்ணத்துப்பூச்சி,
அடுத்த கணம் அங்கிருந்து எகிறிப் பறந்தது. தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதற்காக!
.... யாவும் கற்பனை.
#ரிஸ்கிஷெரீப்
31.05.2021
#ரிஸ்கிஷெரீப் #தமிழ்சிறுகதைகள்
#COVID19 #Acron / Water Colour Tub
#ரிஸ்கிஷெரீப்
31.05.2021
#ரிஸ்கிஷெரீப் #தமிழ்சிறுகதைகள்
#COVID19 #Acron / Water Colour Tub






